Saturday, November 28, 2009

அதிகாரம்:16. பொறையுடைமை - முகவுரை

அதிகாரம்

: 16

பொறையுடைமை

முகவுரை

Chapter : 16

Forbearance

Preface

இகழ்ச்சியை, ஏச்சுக்களை, ஏளனத்தை, வலியை, ரணத்தைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை. அழுத்தங்களையும், ஆத்திரங்களையும் அமைதியாகத் தாங்கிக் கொள்ளும் தன்மை. வெற்றிப் பயணத்தில் ஏற்படும் துன்பத்தை, சோகத்தை, சோதனைகளை, தோல்வியைச் சகித்துக் கொள்ளும் தன்மை.

அறியாதவர், புரியாதவர் செய்யும் இன்னலையும், இடரையும் கண்டு கொதிக்காது விட்டுக் கொடுக்கும் மனப் பாங்கு. அறிவிலிகள் இளைத்த கொடுமைக்கு, தீங்கிற்குப் பழிவாங்காது புறந்தள்ளி, மன்னிக்கும் பெருங்குணம். எடுத்த காரியத்தின் குறிக்கோளில் சிதறாது பிறவற்றை ஒதுக்கும் கெட்டிக்காரத் தனம்.

காலத்தை ஊன்றிக் கவனித்து ஏதுவான சமயத்தில் பயன் படுத்தி வெற்றி நோக்கிச் செல்லத் தேவைப்படும் அடக்கம், மன வலிமை. எதாலும் வெல்ல இயலாத கால இடைவெளியைக் கருத்துச் சிதறாது, பிஞ்சிலே பழுத்து வெம்பிவிடாது, வெற்றிக் கனியைத் தொட்டுவிடக் காட்டும் முன்னோக்கு, முற்போக்குத் தன்மை, வளர்நிலை அமைதி. சூலாகிய கரு, உருவாகி, உறுப்பட்டு வெளிப்பட்டு நிலைப்பட இயற்கையுடன் ஒன்றிச் செயல்படும் நல்லெண்ணத் தவம். தற் பெருமைகளையும், அரைகுறை அறிவையும் உளரலையும், குளரலையும் மேதமையெனத் தம்பட்டம் அடித்து சுய இலாபம் தேடாது, உண்மையான அறிவுத் தேடலை, மனித குல மேம்பாட்டை, உயர்வினைத் தேடும் உன்னத மனோ நிலை. ஆர்ப்பரிக்கும் கூப்பாடுகளையும், ஆர்ப்பாட்டங்களையும், கும்மாளங்களையும் தவிர்த்து அமைதியுடன் ஆனந்த மயமாய் இருக்கும் மனோ நிலை.

காலச் சக்கரத்தின் சுழற்சியில் ஏற்படும் மேன்மைக்கும், சிறுமைக்கும் நிலைதவறாது நின்று காட்டும் எதையும் தாங்கு இதயம். தோல்வியிலும் துவளாமை காட்டும் மேல் அறிவுத் திண்மை. எளியவருக்கு இரங்குவது மட்டுமன்று அவரையும் இணைத்துக் கொண்டு வலியோராய் மாற்றும் திறம். உணர்வுகளை, உரிமைகளைத் திணிக்காது, அழிக்காது, அவசரப்படாது உரிய நேரத்தில் வெளிப்படுத்தக் காட்டும் கால தாமதம். இடைப் படும் காலத்தில் சோம்பிச் சுருளாது, முன்னேற்றத்தையும், முயற்சியையும் விட்டுவிடாது தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் தன்மை. அடை காக்கும் பேராற்றல்.

இன்று தனக்கும் கிட்டும் எனும் நிலையறியா நிலையில் தவிக்கும் மனத்துடன் வரிசையில் நிற்போர் காட்டும் அவசர ஆத்திரம், உந்து வண்டியில் அமர்ந்திருந்தாலும் தன் வாய்ப்புக் கிட்டுவதற்கு முன்னரே காட்டும் ஆத்திரத்தில் அடங்காது காட்ட எழுப்பும் ஒலி, தெய்வச் சிலைக்குக் காட்டும் தீபாராதனை பார்க்கக் கூட முட்டி மோதிப் போராடிக் காண வேண்டிய தீப ஒளி இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம் சகிப்புத் தன்மையும், பொறுமையும் இல்லாததே.

தீர்வு காண வேண்டிய தருணத்தில், தோல்வியுற்ற களைப்பில் துவண்டுச் சுருங்கி முடங்கிப் போவதல்ல பொறுமை. மூல காரணத்தை உய்த்துணர்ந்து, வெற்றியை நெஞ்சில் தேக்கி முயற்சியைத் தவறாது அமைதியுடன் தொடருதலே பொறுமையின் பெருமை. அனைத்தையும் புரிந்து கொண்டு உறுதியுடன், நம்பிக்கையுடன் காலம் கனியக் காத்திருக்கும் பெருந்தன்மை. காரியம் கை கூடப் பதறாது காத்திருக்கும் பொறுப்பு உணர்வுக் குணமே பொறுமை. அத்தகைய பொறுமையை உடையவராய் இருத்தல், பொறையுடைமை.

தீநெறி நின்று தீமை செய்தாரையும் பொறுத்தல் பொருட்டு, ”பிறன் இல் விழையாமை” அதிகாரத்தைத் தொடர்ந்து “பொறையுடைமை” பற்றி வள்ளுவர் இங்கே தொடருகின்றார்.


ஒப்புரை (Reference)

பழமொழிகள்:
பொறுமை கடலினும் பெரிது.
பொறுத்தவர் பூமி ஆழ்வார்.
கெட்டுப்போகின்றவர் விட்டுக் கொடுப்பதில்லை; விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை.

திருமந்திரம்: 1005.
அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந்து எய்திடும் முத்தியே. 3

திருமந்திரம்: 1050.
குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே. 6

திருமந்திரம்: 1085.
கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசக்தி
அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுள் பூசனை யாளே. 11

திருமந்திரம்: 1103.
தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே. 29

மாணிக்கவாசகர். திருவாசகம்:
7. காருணியத்து இரங்கல் (அறுசீர் ஆசிரிய விருத்தம்)

இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி
பழித்தனன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி
ஒழித்திடில் வாழ்வு போற்றி உம்பர்நாட டெம்பி ரானே. 70

மாணிக்கவாசகர். திருவாசகம்:
9. ஆனந்த பரவரசம் (கலிநிலைத்துறை) :

மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையானே
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும்
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே. 89

ஔவையார். ஆத்திசூடி:
2. ஆறுவது சினம்.
10. ஒப்புர வொழுகு.
19. இணக்கமறிந் திணங்கு.

ஔவையார். கொன்றை வேந்தன்:
67. பையச் சென்றால் வையம் தாங்கும்

ஔவையார். மூதுரை:
கடவுள் வாழ்த்து:

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

ஔவையார். நல்வழி:
வெட்டெனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும். 33

***


In English:

The quality of good natured tolerance for any abuses, despises, insults, pains and wounds. It is the trait to bear the pressure and anger politely. It is the patience in the journey towards victory to tolerate any suffering, sorrow, grief, trial and adversity.

It is the mental state to bear with and to be considerate for the disturbances and blocks created by the innocent and ignorant. It is the great trait to forgive and ignore without revenging the ill doings by the ignorant. It is the intelligence and wisdom to avoid other things to achieve the determined goal.

It is the self-control and mind power to observe meticulously the time and utilizing it towards the success. It is the forwardness and the advancement for the fruitful attainment of success without deviating from the goal or dropping out in the middle in challenging the unbeatable time duration, the patience of growth. It is good thinking penance along with the nature to deliver the conceived in full form and completely developed. It is the pure mind state which seeks for the true knowledge, development for the humanity, ever growing excellence without self boasting and blabbering to claim the geniuses for the half baked knowledge or for the faked wisdom. It is the happy mind set to be in peace without any roar, shouts, showoffs and jumps.

It is state of the heart or mind to be judicious and in justice for all ups and downs whatever be the changes caused and stamped by the time. It is the mind power to be bold even in defeat or loss. It is not only the kindness to the poor but it is the ability to make them also strong. It is the time delay to show appropriately without haste, emotions and thrusts. It is the nature to retain the perseverance and progress without idleness in the intermediary duration. It is the great power of hatching.

The people in the queue showing hasty and anger due to the doubt whether they would get their turn or not, though sitting in a car in the traffic signal even before getting their turn showing their haste and urgency by honking, the crowd showing fist fight even in temple to take a view of the deepa, the light shown around the God, the reason behind for all these are nothing but the impatience and intolerance.

Patience is not to become limp or withering lethargically for the failures at the time when the solution is to be sought. Understanding the root causes, keeping the victory in the mind, persistency continuing the trying peacefully is the greatness of patience. It is the greatness of waiting for the reaping time with strong comprehensions and trusts. It is the characteristic of responsibility to stay for the successful completion of the work. Forbearance is containing such patience in one self.

For the sake of bearing with even the non virtuous offenders, after the chapter 'Non-adultery" Valluvar is continuing here with "Forbearance" chapter.

***

0 comments:

Post a Comment

குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்...